logo-lamb

ஸ்ரீ பத்மாவதி சமேத திருவேங்கடநாதன் அறக்கட்டளை

logo-lamb

சித்தமல்லி கோவில் வரலாறு

அனைத்து வேத சாஸ்திரங்களிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தவரும் , மந்திரங்களை முறைப்படி பாராயணம் செய்பவரும் ஆன ஓர் இளைஞர், தன் மனைவியையும் ஒரே மகனையும் காப்பாற்றுவதற்காக வேண்டி, அவர்களை ஊரிலேயே தங்கியிருக்கும்படி சொல்லிவிட்டு, தாம் வேத சாஸ்திரங்கள் கற்ற ஊரான கும்பகோணத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.

அப்படி செல்லும் வழியில், ஒரு கிராமத்தை அடைந்தார். கசங்கிய உடையும், பசியால் வாடிய தேகமுமாகக் காணப்பட்ட அவர், அங்கே ஒரு வீட்டில் வேத சாஸ்திரிகளுக்கு சமாராதனை நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்த்து, அந்த வீட்டுக்குச் சென்றார். அந்தக் காலத்தில், கிராமங்களில் ஏதேனும் ஒரு வீட்டில் சமாராதனை நடைபெற்றால், அதில் வேதம் படித்தவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்; யாரும் தடை செய்யமாட்டார்கள். எனவே, அந்த இளைஞரும் அந்த வீட்டுக்குள் உரிமையோடு சென்றார். ஆனால், அந்த வீட்டுக்குச் சொந்தக்காரரான கிராம அதிகாரி, கசங்கிய உடையும் தளர்ந்த தேகமுமாகக் காணப்பட்ட அந்த இளைஞரை உள்ளே அனுமதிக்காமல், வெளியிலேயே நிற்கவைத்தார். வைத்த பாராயணன்கள் முடிந்து அனைவரும் சாப்பிட அமர்ந்தபோது, அந்த இளைஞரும் சாப்பிடச் சென்றார். அப்போதும் அவரைத் தடுத்த கிராம அதிகாரி, வேத விற்பன்னர்கள் சாப்பிட்ட பிறகு அவர்கள் உடம்பில் பூசிக்கொள்வதற்கான சந்தனத்தை அரைத்து வைக்கும்படி உத்தரவிட்டு, அவரை வீட்டின் பின்பக்கம் அனுப்பி விட்டார். அந்த இளைஞரும் அவர் சொன்னபடியே சென்று, அங்கிருந்த கல்லில் சந்தனம் அரைக்கத் தொடங்கினார் அப்படி அரைக்கும்போது மந்திரங்களை ஜபித்துக்கொண்டே அரைத்தார்.

அவர் சந்தனம் அரைத்து முடிக்கவும் வேத விற்பன்னர்கள் சாப்பிட்டு முடிக்கவும் சரியாக இருக்கவே, கிராம அதிகாரி அந்த இளைஞர் அரைத்து சந்தனத்தை அவர்களுக்குக் கொண்டு வந்து கொடுக்குமாறு உத்தரவிட்டார். அவரும் அப்படியே செய்தார். அவர் தந்த சந்தனத்தை வாங்கி அவர்கள் உடலில் ஆனந்தமாகப் பூசிக்கொண்டனர். ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே, அவர்கள் உடல் முழுவதும் அனலாகச் சுட்டெரித்தது; கொப்புளங்களும் தோன்றின. வலி பொறுக்கமாட்டாமல் அவர்கள் அலறினர். கிராம அதிகாரி பதறிப் போனார்.. சந்தனம் அரைத்த இளைஞரை அழைத்து, மிரட்டி,விசாரித்தார்.

சந்தனம் அனலாக அவர்களைச் சுடுவதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்த அந்த இளைஞர், தாம் சந்தனம் அரைக்கும் போது ஜபித்த அக்னிசூக்தத்தின் விளைவுதான் இப்படி என்ற முடிவுக்கு வந்தார். உடனே அவர், தாம் அரைத்த சந்தனத்தின் மீதி இருக்கிறதா என்று கேட்டு வாங்கி அதை மீண்டும் வருணனைஜபித்தபடி அரைத்து, அதை அந்த வேத விற்பன்னர்களிடம் கொடுத்துப் பூசிக் கொள்ளச் சொன்னார். அவர்கள் அப்படியே செய்யவும், அனலாகத் தகித்த உடம்பு குளிர்ந்ததுடன், கொப்புளங்களும் மறைந்தன.

ஜபத்தின் மூலமாகவே சந்தனத்தை தகிக்கவும் குளிரவும் செய்த அந்த இளைஞரின் ஆற்றலைக் கண்ட வேதவிற்பன்னர்கள் வியப்பும் மரியாதையும் கொண்டவர்களாக அவரை நமஸ்கரித்தார்கள்.

கிராம அதிகாரியோ, பெரிய மகானை தான் மதிக்கத் தவறிவிட்டோமோ என்று பயந்துபோனவராக, அந்த இளைஞரின் கால்களில் விழுந்து வணங்கியதுடன், அவரை உள்ளே அழைத்து உபசரித்து, உணவு அளித்து, புது வஸ்திரங்களும் பொற்காசுகளும் கொடுத்து அனுப்பினார்.

இப்படிப்பட்ட ஆற்றல் கொண்ட அந்த இளைஞரை பின்னாளில் மகானாக மேன்மையுற்று, கற்பக விருக்ஷமாக பலருக்கும் வேண்டியதை வேண்டியபடி அருளிக்கொண்டு இருக்கிறார். அந்த மகான்தான், தம்முடைய பக்தை ஒருவரிடம், சித்தமல்லி க்ஷேத்திரம் விரைவிலேயே உலக பிரசித்தி பெறப்போகிறது என்று அருள்வாக்கு அருளியவர்.

அதே சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த ஓர் அன்பருக்கு, சில காலங்களுக்கு முன்னால், ஒரு சந்தியாகாலத்தில் தரிசனம் தந்தார் அந்த மகான். சித்தமல்லி வெகு விரைவில் பிரசித்தி பெறப் போகிறது என்று தாம் சொன்னதற்குக் காரணமாக அமைந்திருந்த ஓர் இடத்தையும் அடையாளம் காட்டி அருளினார்.

அந்த அன்பருக்கு ஏற்பட்ட அந்த அமானுஷ்ய அனுபவத்துக்குப் பிறகு, அவருடைய மனநிலை அடியோடு மாறிப்போனது.

அந்த மகான் யார்?

அந்த மகான் அடையாளம் காட்டிய இடத்தில் அப்படி என்னதான் அதிசய சக்தி இருக்கிறது?

வாருங்களேன், சித்தமல்லிக்கு..!

வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து மணல்மேடு வழியாக கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் சாலையில், சுமார் 16 கீ.மீ தொலைவில் உள்ள அழகிய கிராமம் தான் சித்தர்களின் பூமியான சித்தமல்லி. சித்தர்களின் பூமி எனும்போது, அங்கே சித்துக்களுக்குக் குறைவிருக்குமா என்ன? மேலும் அந்தச் சித்துக்கள் எல்லாம் மனித குலத்தின் நன்மைக்காகவே இருக்கும் என்பது உண்மைதானே?! அப்படி, சித்தர் பெருமக்களால் ஆசிர்வதிக்கப்பட்ட அந்த புனித பூமிதான் விரைவிலேயே உலகப் பிரசித்தி பெறப்போகிறது என்றொரு அருள்வாக்கு கிடைத்திருக்கிறது.

சித்தமல்லி கிராமத்தின் மேற்குப்புறத்தில், திருச்சி முக்கொம்பில் இருந்து பிரிந்து கும்பகோணம் அணைக்கரை அருகில் கீழணையில் கலக்கும் கொள்ளிடம் உத்தரவாஹினியாகத் தவழ்ந்து ஓடுகிறது. அந்த கிராமத்தில் கிழக்கு மேற்காக நீண்டுகிடக்கும் அக்ரஹார வீதியில், தெற்கு பார்த்த ஒரு வீட்டில் வசிப்பவர் நாகராஜன் என்னும் அன்பர். சில காலத்துக்கு முன், அவருக்கு ஓர் அனுபவம் ஏற்பட்டது.

அது ஒரு மாலைப் பொழுது. தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டு இருந்தார் நாகராஜன். மேற்கு வாயிலில் சூரியன் மெள்ள மெள்ள மறைந்துகொண்டிருக்க, திடீர்ரென்று எங்கும் மெல்லிய இருள் சூழ்வது போன்ற உணர்வு நாகராஜனுக்கு ஏற்பட்டது. அது அவருடைய மனதுக்குள் இனம் தெரியாத ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தியது.அப்போது, மேற்குத் திசையில் ஓர் உருவம் நாகராஜனை நோக்கி வரத்தொடங்கியது. அப்படி வரும்போதே இனம் தெரியாத ஒரு தெய்விக மணம் அந்த வீதியையே நிறைத்துவிட்டது மாதிரி ரம்யமாக இருந்தது.

காவி வஸ்திரம் உடுத்தி, துளசிமணி மாலை அணிந்து, ஒரு கையில் கமண்டலம் தாங்கி வந்த அந்த உருவம் வேறு யார்? நாகராஜனின் நாளும் பொழுதும் நமஸ்கரிக்கும் மகான் அல்லவா அவர்? அந்த கணமே நாகராஜனின் மனதில் இருந்து அச்ச உணர்வு மறைந்து, பரவசம் ஏற்பட்டது. மகானின் தரிசனம் கிடைக்கப்பெற்ற பரவசத்தில் இருந்த நாகராஜன், அவரின் திருவடிகளில் விழுந்து நமஸ்கரிக்க யத்தனித்த வேளையில், அந்த மகான் நாகராஜனின் வீட்டுப்பக்கமாக வராமல், அவருடைய வீட்டுக்கு நேர் எதிரில் இருந்த ஒரு வீட்டுக்கு முன்பாக சென்று நின்றார். தம் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை அந்த வீட்டு வாசலில் சிறிது தெளித்தார். பின்னர், தம்முடைய திருவடிகளால் தரையில் எதோ யந்திரம் வரைவதுபோல் கோலம் போட்டார். பின்னர், வந்த வழியே திரும்பிச் சென்று, மறைந்துவிட்டார்.

தன்னை நோக்கி வந்து தரிசனம் தந்த மகான், தன் வீட்டுக்கு வராமல், எதிர்வீட்டுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று ஆதங்கம் ஏற்பட்டது நாகராஜனுக்கு. கொஞ்சம் கோபமும் உண்டானது. காரணம், எதிர்வீட்டில் வசித்த சுந்தரநாராயணன் என்பவர், கடவுள் நம்பிக்கை அற்ற நாத்திகர். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ அவருக்கு கடவுள் நம்பிக்கையும் இல்லை; ஆச்சார அனுஷ்டானங்களிலும் நம்பிக்கை இருக்கவில்லை.அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள, 1960களின் தொடக்கக் காலத்துக்குச் செல்லவேண்டும்.

சுந்தரநாராயணன் வேளாண்மைத் துறையில் பணி புரிந்த காலம் அது. தன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள இடத்தில், கட்டிடம் கட்ட முடிவு செய்தாா்.ஆனால் தன் முன்னோா்களால் பூஜிக்கப் பெற்ற தெய்வத்திருவுருவச்சிலைகள் இருந்தன.

கடவுள் நம்பிக்கை சற்றும் இல்லாத சுந்தரநாராயணன் அந்த விக்கிரஹங்களை வீட்டிலிருந்து எடுத்துச் சென்று, வேறு எங்காவது வைத்துவிட வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே, அப்போதைக்கு அந்தச் சிலைகளைச் சுவரோரமாக சார்த்தி நிற்க வைத்து விட்டு, அலுவலகத்துக்குச் சென்று விட்டார். பணியின் காரணமாக அவரால் அன்று இரவு தாமதமாகத்தான் வீட்டுக்கு வரமுடிந்தது. பொழுது விடிந்ததும் அந்தச் சிலைகளை வீட்டில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே உறங்கச் சென்றார்.

ஆனால், விடிந்ததும் நடந்ததோ வேறு!

சுந்தரநாராயணனின் அண்ணி அவரை அழைத்தார். முதல் நாள் இரவு தன் கனவில் கடவுள் தோன்றியதாகவும், 'என்னை அலட்சியப்படுத்த வேண்டாம் என்று அவனிடம் (சுந்தரநாராயணன்) சொல். மீறி அலட்சியப்படுத்தினால், மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும் என்று எடுத்துச் சொல்!' என்று எச்சரித்ததாகவும் சொன்னார்.

அப்போதும் சுந்தரநாராயணன் அசர வில்லை. "போயும் போயும் அந்தக் கடவுள் ஒரு பெண்ணின் கனவிலா தோன்றி மிரட்டவேண்டும்? தைரியம் இருந்தால், அவர் என் கனவில் வந்து மிரட்டட்டுமே, பார்க்கலாம்!" என்று கேலியாகப் பேசினார்.

ஆனால், அவருடைய மனைவியும் குழந்தைகளும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதன்பேரில் அந்த தெய்வச் சிலைகளை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தாமல், வைத்த இடத்தில் வைத்தபடியே விட்டுவிட்டார்.

அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள், அவரது வாழ்க்கைப் போக்கையே திசை திருப்பிவிட்டன!

தான் அகற்ற நினைத்த தெய்வத் திருவுருவங்களை, தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் கேட்டுக்கொண்டதன்பேரில், வைத்தது வைத்தபடி இருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டார் சுந்தரநாராயணன். மற்றபடி, அவர் அந்தத் திருவுருவங்களை உரிய முறையில் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டும் என்று நினைக்கவே இல்லை.

ஆனால், அவருடைய மனைவி மட்டும் தினமும் அந்த தெய்வத் திருவுருவங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் விளக்கு ஏற்றி, நைவேத்தியம் செய்து வழிபடுவதை ஆத்மார்த்தமாகச் செய்துவந்தார். அவருடைய பிள்ளளைகளும் தாங்கள் தேர்வுகளில் வெற்றி பெறவேண்டும், போட்டிகளில் ஜெயிக்கவேண்டும் என்பன போன்ற வேண்டுதல்களை பக்திபூர்வமாகச் செய்துவந்தனர். சொல்லப்போனால், அவர்கள் அந்தத் தெய்வத் திருவுருவங்களை, தங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களாகவே பாவித்து, அன்பும் பக்தியும் செலுத்தி வந்தனர்.

இதையெல்லாம் கண்டும் காணாதவர் போல் இருந்தாலும் மனைவி மற்றும் பிள்ளைகளின் மனப்போக்கில் சுந்தரநாரயணன் குறுக்கிடவில்லை. அதே நேரம், அவர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும்கூட அந்தத் தெய்வத் திருவுருவங்களுக்கு ஒரு சின்ன கீற்றுக் கொட்டகை போட்டுக் கொடுக்கக்கூட மனம் வரவில்லை அவருக்கு.

காலங்கள் கடந்தன. பிள்ளைகள் நல்லமுறையில் படித்து பணியில் சேர்ந்துவிட்டபடியால், சுந்தரநாராயணன் தம்பதியும் அடிக்கடி சென்னையிலேயே தங்கவேண்டி வந்தது. அதனால் பெருமாளையும் தாயாரையும் கவனிப்பார் இல்லாமல் போய்விட்டது. எத்தனை காலம்தான் இப்படியே இருப்பது? தவத்திற் சிறந்த மகானால் வழிபடப்பெற்ற அந்த தெய்வத் திருவுருவங்கள் மீண்டும் கோயில்கொண்டு, வழிபடும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை அருளவேண்டாமா?

அதற்கான காலமும் 2012ம் ஆண்டில் கனிந்து வந்தது.

சித்தமல்லியைச் சொந்த ஊராகக் கொண்டவர் ராமமூர்த்தி. சிறு வயதிலேயே பெற்றோருடன் சென்னைக்கு வந்துவிட்டனர். வருடங்கள் பல சென்றாலும், தான் பிறந்த ஊரான சித்தமல்லியை அவர் மறக்கவில்லை. தன் குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் என்றாலும், அதற்கு முன்போ பின்போ ஊருக்குச் சென்று, அங்குள்ள சுந்தரநாராயண பெருமாள், கயிலாசநாதர், ஐயனார் உள்ளிட்ட கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதை ஓர் ஆன்மிகக் கடமையாக கொண்டு செய்துவந்தார். அவருடைய பிள்ளைக்குக் கடந்த 2012ம் ஆண்டு உபநயனம் நடந்தது. அதை முன்னிட்டு ஊருக்குச் சென்று, வழக்கம் போல் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் செய்ய விரும்பினார். அதற்குத் தேவையான பூஜா பொருட்கள் மற்றும் வஸ்திரங்களை வாங்கிக்கொண்டார்.

ஊருக்குச் செல்வதற்கு முன் ஆன்மிக வழிகாட்டியாக தான் மதிக்கும் ஒரு பெண்மணியைச் சந்திக்கச் சென்றார். அந்தப் பெண்மணியை ஆட்கொண்ட மகான் தான், சித்தமல்லி விரைவிலையே உலகப் பிரசித்தி பெறப்போகிறது என்று அவருக்கு அருள்மொழி சொன்னவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ராமமூர்த்தியும் அவருடைய மனைவி சித்ராவும், ஊரில் உள்ள தெய்வங்களுக்காகத் தாங்கள் வாங்கிய வஸ்திரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு, அந்த பெண்மணியின் ஆசிகளை வேண்டினார்கள்.

அதற்கு முந்தின நாள் இரவு, அந்தப்பெண்மணியின் கனவில் தோன்றியது ஓர் அபூர்வ காட்சி! அந்தப் பெண்மணியை ஆட்கொண்ட மகான் அவரின் கனவில் தோன்றி, சித்தமல்லி கிராமத்தில் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தனக்கென ஒரு கூரை இல்லாத நிலையில் இருக்கும் தெய்வத் திருவுருவங்களைக் காட்டி, இந்தத் திருவுருவங்களுக்கும் வஸ்திரம் கிடைக்கச் செய்! அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் நாளை உன்னைப் பார்க்க வருவார்கள்| என்று கூறி இருந்தார்.

கனவில் மகான் சொன்னதுபோலவே, மறுநாள் தன்னைப் பார்க்க வந்த ராமமூர்த்தி தம்பதியிடம் அந்தப் பெண்மணி "சித்தமல்லியில் வஸ்திரம் கூட இல்லாமல் இன்னும் இரண்டு தெய்வத்திருவுருவங்கள் இருப்பதாக என் கனவில் தாத்தா (அவர் தாத்தா என்று சொன்னது அவரை ஆட்கொண்ட மகானைத்தான்) வந்து சொன்னார். வந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அவர் சொன்னபடியே தாங்கள் ஏற்கனவே வாங்கி இருந்ததுபோல் இரண்டு வஸ்திரங்களை எடுத்துக் கொண்டு திரும்பவும் அந்தப் பெண்மணியிடம் வந்தனர். அந்தப் பெண்மணி தொடர்ந்து, "நீங்கள் இப்போது வாங்கியிருக்கும் அளவு போதாது. இன்னும் சற்றுப் பெரிய அளவில் வாங்கிக் கொண்டு போய், அந்தத் தெய்வத் திருவுருவங்களுக்குச் சார்த்துங்கள்" என்று சொன்னார்.

அப்படி வஸ்திரம்கூட இல்லாமல் பெரிய அளவில் எந்தத் தெய்வத் திருவுருவங்களும் தம் ஊரில் இருப்பதாக ராமமூர்த்திக்குத் தெரியவில்லை. இருந்தாலும், அந்தப் பெண்மணி சொன்னபடியே மேலும் இரண்டு பெரிய வஸ்திரங்களை வாங்கிக்கொண்டு ஊருக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

ராமமூர்த்தியின் தகப்பனார், சித்தமல்லியில் இருந்த சுந்தரநாராயணனைத் தொடர்பு கொண்டு, தாங்கள் மொத்தம் பதினைந்து பேர் ஒரு குழுவாக ஊருக்கு வர இருப்பதாகச் சொல்லி, இரவு தங்குவதற்கும், மறுநாள் கோயிலில் பூஜைகள் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். சுந்தரநாராயணனும் அப்படியே அவர்கள் தங்குவதற்கு மடமும், கோயிலில் பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடுகளும் செய்தார். ஆனால், ராமமூர்த்தி குடும்பத்தினர் ஊருக்கு வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, சென்னையில் இருந்த சுந்தரநாராயணனின் அண்ணிக்கு உடல்நலம் சரியில்லை என்று தகவல் வரவே, அவர் உடனே கிளம்பி சென்னைக்கு வரவேண்டியதாகிவிட்டது. இந்த விவரத்தை ராமமூர்த்தியின் அப்பாவுக்கு போன் செய்து தெரிவித்ததுடன்,

தன்னுடைய வீட்டுச் சாவியையும் கொடுத்துச் செல்வதாகவும், தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு, சென்னைக்குச் சென்று விட்டார் சுந்திரநாராயணன்.

ராமமூர்த்தி குடும்பத்தினர் வெள்ளிக்கிழமையன்று மாலை சித்தமல்லிக்கு வந்துவிட்டனர். ஆண்கள் மடத்திலும், பெண்கள் சுந்தரநாராயணன் வீட்டிலுமாகத் தங்கிக் கொண்டனர். ராமமூர்த்தியின் மனைவி சித்ராவும் சுந்தரநாராயணன் வீட்டிலேயே தங்கினார்.

பொழுது விடிந்தது. அன்று சனிக்கிழமை. திருவோண நட்சத்திரம். தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட சித்ரா, வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்துகொண்டு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி....?!

சுந்தரநாராயணனின் வீட்டில் தங்கியிருந்த சித்ரா ராமமூர்த்தி மறுநாள் அதிகாலையில் எமுந்து தோட்டத்துப் பக்கமாகச் சென்றபோது, அவர் கண்ட காட்சி அவரை வியப்பில் ஆழ்த்தியது. அங்கே இரண்டு அழகிய தெய்வத் திருவுருவங்கள் சுவரில் சாய்த்து வைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டார் அவர். ஆனாலும், அவர் மனதில் ஒரு குழப்பம். குழப்பத்துக்குக் காரணம், அவர் தரிசித்த தெய்வத் திருவுருவங்களின் முகத்தில் இனம்புரியாத சோகம் இழையோடுவதைப் போன்று இருந்தது. அதேநேரம், அவர் ஊருக்குப் புறப்படுவதற்கு முன்தினம் , அவரின் ஆன்மிக வழிகாட்டியான பெண்மணி சொன்ன வார்த்தைகள் அவருடைய நினைவுக்கு வந்து, அவரை சிலிர்க்கச் செய்தன.

அங்கே அவர் தரிசித்த இரண்டு அழகிய தெய்வத் திருவுருவங்களுக்கு தாங்கள் முதலில் வாங்கி வந்த இரண்டு வஸ்திரங்கன் பொருந்தாது என்பதை உணர்ந்துகொண்டவரின் மனதில், "நீங்கள் வாங்கி வந்த வஸ்திரங்கள் சிறியதாக உள்ளது. இதைவிடப் பெரிய அளவில் வாங்கிச் செல்லுங்கள்" என்று தங்களை வழிநடத்தும் பெண்மணி சொன்ன வார்த்தைகள் எதிரொலித்தன. தங்களை ஆற்றுப் படுத்தியவரை மானசீகமாக நமஸ்கரித்தரர்.

அங்கே அவர் தரிசித்தது, அமர்ந்த கோலத்தில் அருங்காட்சி தந்த பெருமாளுக்கு உகந்த தினமான சனிக்கிழமையில், அவருடைய நட்சத்திரத்தில் பெருமாளையும் தாயாரையும் தரிசித்த பூரிப்பில் திளைத்த சித்ரா, உடனே கணவர் ராமமூர்த்தி தங்கி இருந்த மடத்துக்கு விரைந்து சென்று, தான் பெருமாளையும் தாயாரையும் தரிசித்ததைக் கூறினார். அதைத் தொடர்ந்து, ராமமூர்த்தியும் மற்ற உறவினர்களும் சுந்தரநாராயணன் வீட்டுக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசித்தனர். தாங்கள் எடுத்து வந்த வஸ்திரங்களையும் பட்டாச்சார்யார் ஒருவரைக் கொண்டு பெருமாளுக்கும் தாயாருக்கும் அர்ப்பணித்தனர். பின்னர், தங்கள் குலதெய்வ வழிபாட்டை முடித்துக்கொண்டு சென்னைக்கு வந்ததுமே, பொருமாளிடம் தங்களை ஆற்றுப்படுத்திய பெண்மணியின் வீட்டுக்கு வந்து, நடந்த விஷயங்களைத் தெரிவித்தனர். மேலும் பெருமாள் மற்றும் தாயாரின் திருமுகத் தோற்றத்தில் காணப்பட்ட சோகம் பற்றிய தன்னுடைய குழப்பத்தையும் தனியாக அவரிடம் தெரிவித்தார் சித்ரா.

அதற்கு அந்தப் பெண்மணி, "என்னால் ஆவது ஒன்றும் இல்லை. நடப்பது எல்லாமே என்னை ஆட்கொண்ட தாத்தாவின் லீலைகள்தான். அவர்தான் எனக்கு அந்தப் பெருமாளையும் தாயாரையும் கனவில் காட்டினார். அவர்தான் என் மூலமாக அந்தப் பெருமாளைப் பற்றி வெளியுலகத்துக்குத் தெரியவரவேண்டும் என்று சங்கல்பித்துக் கொண்டார். இனிமேல் அந்தப் பெருமாள் பிரபலம் அடைவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று சொன்னவர், தொடர்ந்து... "முடிந்தால் பெருமாளும் தாயாரும் இருக்கும் அந்த வீட்டின் உரிமையாளரை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்" என்றார்.

ஆனால், பெருமாள் மற்றும் தாயாரின் திருமுகத் தோற்றம் பற்றி சித்ரா கேட்டதற்கு எதுவும் சொல்லாமலே மழுப்பிவிட்டார். ஒருவேளை, அதுவும்கூட காலப்போக்கில் வெளிப்படவேண்டிய தேவ ரகசியங்கள்தான் போலும்!

அவர்களின் ஆன்மிக குருவாக அந்தப் பெண்மணி என்று இதுவரை நாம் குறிப்பிட்டு வந்தவரைப் பற்றியும், அவரை ஆட்கொண்ட மகானைப் பற்றியும் நாம் இந்த இடத்தில் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அந்தப் பெண்மணியின் பெயர் பத்மா. எல்லோரும் அவரை பத்மா மாமி என்றே அன்புடன் அழைப்பார்கள். அவரை ஆட்கொண்டு அருளும் மகான், வேறு யாருமல்ல; கற்பக விருட்சமாகவும் காமதேனுவாகவும் தம்முடைய பக்தர்களால் போற்றி வணங்கப்பெறும் ராகவேந்திரர்தான். ராகவேந்திரர் பத்மாவை ஆட்கொண்டு அருளியதன் பின்னணியிலும் பூர்வஜென்மத் தொடர்பு உண்டு. அதுபற்றிப் பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக, அந்த தெய்வத் திருவுருவங்கள் இருக்கும் வீட்டின் உரிமையாளரான சுந்தரநாராயணனைத் தன்னை வந்து பார்க்கும்படி ராமமூர்த்தியிடம் சொன்னபடி சுந்தரநாராயணன் பத்மா மாமியை வந்து பார்த்தாரா, அவர் சொன்னபடி செய்தாரா என்பதைப் பார்த்துவிடுவோம்.

பத்மா மாமியிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்ட ராமமூர்த்தி, நேரே சுந்தரநாராயணன் வீட்டுக்குத்தான் சென்றார். அவரிடம் பத்மா மாமியைப் பற்றியும், அவர் மூலமாக ராகவேந்திரர் பக்தர்களுக்கு அருள்புரிவதைப் பற்றியும் சொல்லி, அவரைப் பார்க்க வரும்படி அழைத்தார். ஆனால், சுந்தரநாராயணன்தான் கடவுளையே நம்பாதவர் ஆயிற்றே! அவர் ராமமூர்த்தியின் அழைப்பை ஏற்கவில்லை. விடாக்கண்டனாக ராமமூர்த்தியும் விடுவதாக இல்லை. "உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர் சொன்னதற்காக ஒருமுறை மட்டும் வந்துதான் பாருங்களேன்" என்று வற்புறுத்தினார். தன்னுடைய ஊரைச் சேர்ந்தவர் என்பதற்காக சுந்தரநாராயணனும் ஒருவழியாக ஒப்புக்கொண்டார். மறுநாள் மாலை போகலாம் என்று முடிவாகியது.

மறுநாள், குறித்த நேரத்தில் ராமமூர்த்தி நீலநிறச் சட்டை அணிந்து, சுந்தரநாராயணனின் வீட்டுக்கு வந்துவிட்டார். அன்றைக்குப் பார்த்து சலவைக்குப் போட்டிருந்த உடைகள் வராததால், வேறு வழி இல்லாமல் சுந்தரநாராயணன் தன் மகனின் டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டு (அதுவும் நீல நிறம்தான்! ) ராமமூர்த்தியுடம் பத்மா மாமி வீட்டுக்கு புறப்பட்டார். அதே நேரத்தில் பத்மா மாமி தன் வீட்டுக்கு வந்திருந்த அன்பர்களிடம், "இன்னும் சற்று நேரத்தில் நீலநிறச் சட்டை அணிந்து இங்கே இரண்டு பேர் வரப்போகிறார்கள் " என்று சொல்லிக்கொண்டடிருந்தார். அப்படி அவர் சொன்ன சற்றைக்கெல்லாம் ராமமூர்த்தியும் சுந்தரநாராயணனும் பத்மா மாமி சொன்னது போலவே நீல நிறச் சட்டை அணிந்து அங்கே வந்து சேரவும், அங்கிருந்தவர்களுக்கெல்லாம் வியப்புனா வியப்பு! விஷயம் அறிந்து ராமமூர்த்தியும் சுந்தரநாராயணனும் கூட வியந்துதான் போனார்கள். ஆனாலும், சுந்தரநாராயணன் 'காக்கை உட்காரப் பனம்பழம்' என்கிற விதமாக, இதற்கெல்லாம் மசியாதவர்போல் காணப்பட்டார்.

பத்மா மாமி அவரிடம், "உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வத்திருவுருவங்களுக்குக் கோயில் கட்டவேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் உள்ளது. அதற்கான காரணம், வேளை வரும் போது உங்களுக்குத் தெரியவரும். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தப் பணியை நீங்கள் நிறைவேற்றியே முடிப்பீர்கள். இவை என்னுடைய வார்த்தைகள் இல்லை. என்னை ஆட்கொண்ட மகான் ராகவேந்திரரின் வார்த்தைகள். அவர் எப்படியும் உங்களை இந்தப் திருப்பணியில் ஈடுபடச் செய்துவிடுவார்.

விரைவிலேயே உங்கள் வீடு ஒரு கோயிலாக மாறி, அங்கே நித்தியப்படி பூஜைககளும் வழிபாடுகளும் நடைபெறப்போவதுடன், தாத்தா சொன்னபடி அந்த சித்தமல்லி விரைவிலேயே பக்தர்களின் சித்தமெல்லாம் நிறைந்திருக்கப் போகிறது" என்றார். இங்கே தாத்தா என்று அவர் குறிப்பிட்டது மகான் ராகவேந்திரரைத்தான் !

சுந்தரநாராயணன் விட்டேற்றியாக பத்மா மாமிக்குப் பதில் சொல்லிவிட்டுச் சென்றாலும்கூட, ராகவேந்திரர் அப்படியே விட்டுவிடுவாரா என்ன? அவருடைய லீலையின் காரணமாக சுந்தரநாராயணன் தன்னுடைய வீட்டில் இருந்த பெருமாளுக்கும் தாயாருக்கும் கோயில் கட்டும் திருப்பணிகளில் இறங்கிவிட்டார்.

பெருமாளும் தன்னை வந்து வழிபடும் பக்தர்களின் சோகங்களை எல்லாம் தன்னுடைய சுமைகளாக ஏற்றுக்கொண்டு அவர்களின் வேண்டுதலை விரைவிலேயே நிறைவேற்றி அருள்புரிந்த வண்ணம் இருக்கிறார். அவருடைய திருப்பணிகளும் வளர்ந்த வண்ணம் உள்ளன.

சரி, கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த சுந்தரநாராயணன் எப்படி மனம் மாறி, ஆன்மிகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார்? மகான் ராகவேந்திரருக்கும் சுந்தரநாராயணனுக்கும் உள்ள பூர்வஜென்ம தொடர்புதான் என்ன?

சுந்தரநாராயணன் பத்மா மாமியிடம் விட்டேற்றியாக பதில் சொல்லிவிட்டு வந்தாலும்கூட, பெருமாள் அவரை அப்படியே விட்டுவிடுவாரா என்ன? அவரால்தானே பெருமாளின் திருப்பணிகள் நடைபெறவேண்டும் என விதிக்கப்பட்டிருக்கிறது? அந்த விதியும்கூட அவருடைய முன் ஜன்ம வினைப்பயன் காரணமாகத்தான் அவருக்கு அமைந்தது. எனவே, விதைத்தவன்தானே அறுவடை செய்யவேண்டும்? முன் ஜன்மத்தில் அவர் விதைத்தது என்ன என்பதை பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக, ஆண்டாண்டு காலமாக கடவுள் மறுப்பாளராகவே இருந்து வந்த சுந்தரநாராயணன்,அந்த இரவிலேயே கடவுளை ஏற்றுக் கொண்டது எப்படி தன்னால் பெருமாள் திருப்பணியில் ஈடுபட முடியாது என்று பத்மா மாமியிடம் சவால் விடுவதுபோல் சொல்லிவிட்டு, நேரே சென்னையில் உள்ள தன் மகனின் வீட்டுக்குச் சென்றுவிட்டார் சுந்தரநாராயணன். அவருடன் சென்ற அவரின் மனைவி ஜெயலக்ஷ்மிக்கு கணவரின் இந்தப் போக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. காரணம்,அவர் பத்மா மாமி வீட்டுக்குச் சென்றபோது,அவருக்குள் அதுவரை இல்லாத ஒருவித பரவச உணர்வு ஏற்பட்டு, அவரை சிலிர்ப்படையச் செய்திருந்தது. தனக்கு ஏற்பட்ட அந்தப் பரவச அனுபவத்தைப் பற்றி கணவரிடம் சொல்லி, பத்மா மாமி சொன்னதுபோல் பெருமாளின் திருப்பணிகளை மேற்கொள்ளலாமே என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், சுந்தரநாராயணன் ஏற்பதாக இல்லை.

அன்று இரவு, அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். எங்கும் பூரண நிசப்தமாக இருந்த அந்த நடுநிசி 12:00 மணி வேளையில் சுந்தரநாராயணனை யாரோ தட்டி எழுப்புவதுபோல் இருந்தது. திடுக்கிட்டு விழித்தவரின் மனதில், ஏதேதோ மறைபொருள் செறிந்த வாக்கியங்கள் தோன்றுவதுபோல் இருந்தது. திரும்பத் திரும்ப மனதில் தோன்றிய அந்த வாக்கியங்களை, தூக்கக் கலகத்திலேயே தன்னிச்சையாக எழுந்து, ஒரு பேப்பரை எடுத்து, அதில் எழுதத் தொடங்கினார். அது அழகிய கவிதையாக அமைந்திருந்ததை, காலையில் கண்விழித்துப் பார்த்த பின்புதான் அவர் உணர்ந்தார். 'மூல ராமனை பூஜித்த அருளாளர் அருளாலே அகிலம் புகழ ஆராதனை செய்வோம் வாரீர், 'என்று உலகத்தவரை அழைப்பதுபோல் முடித்திருந்தது.

கடவுள் நம்பிக்கை மட்டுமல்ல, கவி பாடும் திறனும்கூட தனக்கு எப்படி ஒரு கவிதை எழுத வந்தது என்று அவருக்கு ஒரே ஆச்சர்யம்! ஆனாலும்கூட, அவர் அப்போதும் தனது கொள்கையில் இருந்து சற்றும் மாறவே இல்லை.இறைவனின் அனுக்கிரஹம் தனக்கும் புராணமாகக் கிடைத்திருப்பதை உணராமல், தன் போக்கிலேயே பிடிவாதமாக இருந்த சுந்தரநாராயணன் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்தான். ஆனால், அவரை அந்த நிலையிலேயே விட்டுவிட பெருமாள் தயாராக இல்லை. மறுநாள் இரவு, அவருக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கச் சித்தம் கொண்டுவிட்டார். அந்த விவரம் எதுவும் புரியாதவராக,மறுநாள் காலையில், தான் எழுதிய கவிதையுடன் பத்மா மாமியைப் பார்க்கச் சென்றார் சுந்தரநாராயணன்.

அவருடைய கவிதையைப் படித்துப் பார்த்த பத்மா மாமி, "இப்போதாவது தாத்தா (ஸ்ரீராகவேந்திரர்) சொல்லுவதை நம்புகிறீர்களா?" என்று கேட்டார். அப்போதும்கூட, பட்டும்படாமலும்தான் பதில் சொன்னார் சுந்தரநாராயணன். பின்னர் தன் மனைவியை மகன் வீட்டில் விட்டுவிட்டு, அவர் மட்டும் தனியே சித்தமல்லிக்குக் கிளம்பிச் சென்றார்.

அன்று மாலையில் அவருடைய வீட்டு வேலையாள் அவரிடம் வந்து, "ஐயா, நேற்று நீங்கள் சொன்னதுபோலவே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சிவிட்டேன்" என்று சொன்னார். சுந்தரநாராயணனுக்கோ ஆச்சர்யம் ப்ளஸ் குழப்பம்! காரணம், அவர் சற்று முன்தான் சென்னையில் இருந்து வந்திருந்தார். அப்படியிருக்க, அவர் எப்படி வேலையாளிடம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி சொல்லி இருக்க முடியும்? எனவே 'நான் உன்னிடம் எப்போது அப்படி சொன்னேன்? என்று கேட்டார். "நேற்று ராத்திரி நான் நல்ல தூக்கத்தில் இருந்தேன். என்னை எழுப்பி மறக்காமல் தண்ணீர் பாய்ச்சும்படி சொன்னீர்களே ஐயா!' என்றார் வேலையாள். சுந்தரநாராயனுக்கு அப்போதுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அதாவது, முந்தைய தினம் அவர் பத்மா மாமி வீட்டுக்குச் சென்றிந்தபோது, பெருமாளைப் பற்றி சொன்னதை எல்லாம் கேட்டுவிட்டு, "ஆமாம், நீங்கள்தான் பெருமாளின் அருளைப் பற்றி உயர்வாகச் சொல்கிறீர்கள். கடந்த பல வருஷமாகவே என்னுடைய நிலத்தில் விளைச்சலே இல்லை. ஒரே வறட்சியாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் பெருமாளுக்கு உண்மையிலேயே சக்தி இருக்குமானால், என்னுடைய நிலத்தில் நல்ல விளைச்சல் எற்பட வழி செய்யட்டுமே, பார்க்கலாம்!" என்று சவால் விடுவது போல் சொல்லியிருந்தார். அதற்கு மாமி, "நிச்சயம் பெருமாள் நல்ல விளைச்சல் தருவார்.அப்படி தந்தால், ஒரு மூட்டை நெல்லை பெருமாளுக்குக் காணிக்கையாகத் தருவீர்களா?" என்று கேட்டார். சுந்தரநாராயணனும் சம்மதித்தார்.

பெருமாள் தன்னுடைய அருள் திறனை சுந்தரநாராயணன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக,அவர் சென்னையில் இருந்த நேரத்தில், அவருடைய உருவத்தில் சென்று வேலையாளை எழுப்பி, 'வாய்க்காலில் தண்ணிர் வருகிறது.வயலுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்சு' என்று உத்தரவு கொடுத்தார்போலும்! நடந்தது பெருமாளின் லீலைதான் என்பதை சுந்தரநாராயணன் புரிந்து, சிலிர்த்தார். சொல்லிவைத்தது போலவே, அந்த வருஷம் அவருடைய வயலில் அமோக விளைச்சல்! அவரும் ஒரு மூட்டை நெல்லை பெருமாளுக்குக் காணிக்கையாகத் தந்துவிட்டார்.

தன் உருவில் வந்து பெருமாள் நிகழ்த்திய அருளாடலை எண்ணி வியந்தவர். அப்போதே பெருமாளுக்கு ஒரு கீற்றுக் கொட்டகையாவது போடவேண்டும் என்று முடிவு செய்தார். அந்த எண்ணமே மனதில் சுற்றிச் சுழல, அப்படியே அன்றிரவு படுத்துத் தூங்கியும் போனார்.

அன்றைய இரவில்தான் அவருடைய வாழ்க்கையை அடியோடு திசை மாற்றிப் போட்ட அற்புதம் நிகழ்ந்தது. அன்று நள்ளிரவு, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவரை, 50 வருஷ காலமா என்னை வெயிலிலும் மலையிலும் அல்லல்படச் செய்துவிட்டாயே? உன் குலமும் உலகத்தவர் நலமும் தழைக்கச் செய்வதற்காக வந்த என்னை இப்படியா விட்டு வைத்திருப்பாய்? ஒரு கீற்றுக் கொட்டைகையாவது போட மாட்டாயா?' என்று யாரோ கேட்பதுபோல் இருந்தது. உலகத்தவரின் நலனுக்காகவே வெளிப்பட்ட அந்தப் பெருமாளைத் தவிர, வேறு யார் இப்படிக் கேட்கமுடியும்? தனக்கொரு கோயில் கொண்டு உலக மக்களுக்கு அருள்புரியவேண்டும் என்ற காரணத்தால்தான் சுந்தரநாராயணனிடம் பெருமாள் இப்படிக் கேட்டிருக்க வேண்டும். அதைக் கேட்டதுமே, சுந்தரநாராயணனுக்கு வியர்த்து விறுவிறுத்துவிட்டது. படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்தவர், கொஞ்சம் தண்ணிர் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

அன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்தவர், வழக்கப்படி காபி குடித்த பிறகு வெற்றிலை போட்டுக் கொண்டார். சற்றுப் பொறுத்து பின்வாசல் பக்கம் வந்தவர், எப்போதும்போல் வெற்றிலைச் சக்கையை அங்கிருந்த சுவர் ஓரமாகத் துப்ப யத்தனித்தபோது, மங்கலாகத் தெரிந்த ஓர் உருவம், "என் மீதா துப்பப் பார்க்கிறாய்?" என்று அதட்டுவதுபோல் . அவ்வளவுதான்... 1000 வோல்ட் மின்சாரம் உடலில் பாய்ந்ததுபோல் அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டார் சுந்தரநாராயணன்.

அங்கே அவர் கண்ட காட்சி..?

விடிந்தும் விடியாத அந்தக் கருக்கல் பொழுதில் வெற்றிலைச் சாற்றைப் துப்ப வந்த சுந்தரநாராயணன், 'என் மீதா துப்பப் பார்க்கிறாய்?' என்று ஒரு மங்கலான உருவம் அதட்டலாகக் கேட்டதும், அப்படியே திடுக்கிட்டு சிலையாகிப் போனார். மங்கலாகத் தெரிந்த அந்த உருவம் உயிரும் உணர்வும் கொண்டு தன் முன் நிற்கிறதா, அல்லது தன்னுடைய மன பிரமையா என்று புரியவில்லை அவருக்கு. சில விநாடிகளில் ஒருவாறு சுதாரித்துக்கொண்ட சுந்தரநாராயணன், காவியுடை உடுத்தி, கையில் கமண்டலமும் தண்டமும் ஏந்தியபடி நின்றிருந்த அந்த உருவத்தையே உற்றுப் பார்த்தவர்.

பார்க்கப் பார்க்க அந்த உருவம் யாரெனப் புரிந்துபோனது அவருக்கு. ஆம்... அங்கே அவர் கண்டது சாட்சாத் ராகவேந்திர ஸ்வாமிகளைத்தான். சிலிர்ப்பை ஏற்படுத்திய அந்தக் கணமும், அதற்கு முன்பாக நள்ளிரவில் பெருமாள் அவர் கனவில் தோன்றி தனக்கு ஒரு கீற்றுப் கொட்டகையாவது போடக்கூடாதா என்று கேட்ட அந்தக் கனவும், அதுவரை கடவுள் மறுப்பாளராக இருந்த சுந்தரநாராயணனின் மனதை அடியோடு மாற்றி, அவரை ஆன்மிக நெறிக்குத் திருப்பியதுடன், பெருமாளின் திருப்பணியில் அவரை முழுமையாக ஈடுபடவும் செய்துவிட்டது.

பொழுது விடிந்ததுமே, உடனடியாக அவர் பெருமாளுக்கு ஓலைக் கொட்டகை அமைத்து விட்டார். ஆனாலும், அவருக்குள் தான் எப்படி பெருமாளுக்கு ஆலயத்தை எழுப்பப் போகிறோம் என்பதாக ஓர் ஆயாசம் ஏற்படவே செய்தது. அன்று மாலை, சென்னையில் இருந்த அவருடைய மகன், போனில் தொடர்பு கொண்டு ஓரு செய்தியைத் தெரிவித்தார். ஸ்ரீ ராகவேந்திரர் தன் கனவில் தோன்றித் தெரிவித்ததாக அவர் கூறிய செய்தி இதுதான்... 'ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரம் வரும் நாளில் பெருமாளுக்கு பூச்சொரிதல் விழா நடத்த வேண்டும்!'

அதன்படி, பெருமாளுக்கு சுந்தரநாராயணன் கொட்டகை அமைத்த சில மாதங்களிலேயே, 23.10.12 அன்று சித்தமல்லி பெருமாளுக்கு பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அந்தச் சில மாத காலத்துக்குள்ளாகவே பெருமாள் தன்னுடைய பக்தர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற பல அற்புதங்களை நிகழ்த்தத் தொடங்கிவிட்டார். பெருமாளின் அருளால் தங்களின் வாழ்க்கைத் துன்பங்கள் நீங்கப்பெற்ற மனநிறைவில் அவர்களும் பெருமாளின் திருப்பணியில் தங்களை அர்பணித்துக்கொண்டு, இயன்ற அளவு உதவி வருகின்றனர். அத்தகைய பக்தர்களின் வாழ்க்கையில் பெருமாள் நிகழ்த்திய அருளாடல்களைப் பற்றிப் பிறகு பார்ப்போம். அதற்கு முன்பாக, சமீபத்தில் சித்தமல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைப் பற்றிப் தெரிந்துகொள்வோம்.

மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் கைங்கர்யம் செய்துகொண்டு இருப்பவர் கேசவன். அவருடைய தாயார் சென்னை மறைமலைநகரில் வசித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்பு, ஒருநாள் இரவு அவருடைய கனவில் ஸ்ரீ ராகவேந்திரர் தோன்றி, 'நீ எப்போது சித்தமல்லிக்குப் போகப் போகிறாய்? அங்கிருக்கும் பெருமாளை எப்போது தரிசிக்கப் போகிறாய்?' என்று கேட்டுள்ளார். மறுநாள் காலையில் எழுந்ததுமே மந்த்ராலயத்தில் இருந்த தன் மகனை போனில் தொடர்புகொண்டு, தான் கண்ட கனவைப் பற்றி கூறியதுடன் தன்னை உடனே சித்தமல்லிக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தான் அனுதினமும் பூஜிக்கும் மகானே தன் தாயின் கனவில் வந்து சொல்லிவிட்ட பிறகு, அதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்த கேசவன், அடுத்த வாரமே சென்னைக்கு வந்து தன் தாயையும் அழைத்துக்கொண்டு சித்தமல்லிக்குச் சென்றார்.

அவர்களுடன் நெல்லையச் சேர்ந்த சிலரும் சென்றனர். பெருமாளைக் கண்குளிர சேவித்தனர்.

பெருமாளை தரிசித்த பிறகு, கேசவன் ஒரு சுவரின் பக்கமாக விழுந்து விழுந்து நமஸ்கரித்துக் கொண்டிருந்தார். சுந்தரநாராயணனுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் கேட்டபோது, அந்தச் சுவரில் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் தனக்குக் காட்சி அளித்ததாகவும், அதனால்தான் தான் பரவசத்துடன் அப்படி பலமுறை நமஸ்கரித்ததாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, "கலியுகத்தின் கற்பக விருட்சமாக திகழும் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் உங்கள் இல்லத்தில் பூரண சாந்நித்தியத்துடன் திகழ்கிறார். நீங்கள் உண்மையிலேயே பாக்கியசாலிதான். அவரால் வழிபடப் பெற்ற பெருமாளுக்கு ஆலயம் அமைக்கக்கூடிய பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றால், அது உங்கள் முன்னோர் செய்த புண்ணிய பலன்தான். சுணங்காமல் திருப்பணிகளை நிறைவேற்றி உடனே சம்ப்ரோக்ஷணம் செய்யுங்கள். அதற்குத் தேவையான அனைத்தையும் ஸ்ரீ ராகவேந்திரர் அனுக்கிரஹம் செய்வார்" என்றும் கூறி, மந்த்ராலய மகானின் பிரசாதத்தையும் கொடுத்தார்.

"நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். மகானின் அனுக்கிரஹத்தையும் பெருமாளின் அருளையும் நான் இந்த மூன்று வருஷங்களில் பூரணமாக உணர்ந்துகொண்டேன். நான் பார்த்து எத்தனையோ பக்தர்களின் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார் பெருமாள்" என்றார் சுந்தரநாராயணன்.

அன்றிரவு அங்கேயே தங்கி, சுந்தரநாராயணனுடன் பல சத்விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட கேசவன், மறுநாள் காலை அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் கிளம்பிச் சென்றார்.

பெருமாள் நிகழ்த்திய அற்புதமாக முதலில் குறிப்பிட்டது கோசாலை ஏற்படுத்திய சம்பவத்தைப் பற்றித்தான். ஓர் ஆலயத்தில் அவசியம் இருக்கவேண்டியது கோசாலைதான். அதிகாலையில் கோயில் திறந்து இறைவனின் விசுவரூப தரிசனத்தின்போது முதலில் பசுவைத்தான் இறைவனின் சந்நிதிக்கு முன்பாகக் கொண்டு வந்து நிறுத்துவது மரபு. தொடர்ந்து கோபூஜையும் நடைபெறும். பசுக்களைப் பராமரிக்கும் கோயில்களில்தான் தெய்வ சாந்நித்தியம் பூரணமாக நிறைந்திருக்கும். அதனால் தான் கவியரசர் கண்ணதாசன், பசுவைப் போற்றிப் பாடும்போது, 'இணங்காதார் மனம்கூட இணங்கும்:

நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்' என்று சிறப்பித்துச் சொல்லி இருக்கிறார்.

அந்த விதத்தில், சித்தமல்லியில் கோசாலை ஏற்பட்ட அற்புதத்தைப் பார்ப்போம். அந்த அற்புதம் எப்படி நிகழ்ந்தது? அது நிகழ்வதற்கு பெருமாள் யாரையெல்லாம் தன் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார்?