logo-lamb

ஸ்ரீ பத்மாவதி சமேத திருவேங்கடநாதன் அறக்கட்டளை

logo-lamb

சித்தமல்லி கோவில் அற்புதங்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அந்த அற்புதம் ... தம்முடைய பக்தை பத்மாவின் கனவில் தோன்றிய ராகவேந்திரர், தம்மால் அடையாளம் காட்டப்பட்ட சித்தமல்லி திருவேங்கடநாதர் ஆலயத்தில் இருந்து ஒவ்வொரு பிரதோஷத்தன்றும் அருகில் உள்ள வைத்திஸ்வரன்கோவில் சிவாலயத்துக்குச் சுத்தமான பசும்பால் அனுப்பவேண்டும் என்று உத்தரவு இட்டார். மேலும், ஒரு பசுவையும் அந்தக் கனவில் காட்டினார். பத்மா வழக்கம்போலவே அந்தச் செய்தியை சுந்தரநாராயணனிடம் தெரிவித்து, உரிய ஏற்பாடு செய்யச் சொன்னார். மேலும், தன் கனவில் ராகவேந்திரர் காட்டிய அடையாளங்களுடன் ஏதேனும் பசு தேடி வந்தால், உரிய பணம் கொடுத்து அந்தப் பசுவை விலைக்கு வாங்கும்படி கூறிவிட்டார்.

அப்போது சுந்தரநாராயணன் வீட்டில் இருந்தது ஒரே ஒரு பசு மட்டும்தான். வைத்தீஸ்வரன்கோவில் ஆலயத்துக்குப் பிரதோஷத்துக்கு பிரதோஷம் பால் கொடுக்க வேண்டும் என்றால், குறைத்தது ஐந்து பசுக்களாவது வேண்டுமே என்று திகைத்த சுந்தரநாராயணன், பாரத்தை ராகவேந்திரர்மேல் போட்டுவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டார் .

வயலில் அறுவடை நடந்துகொண்டிருந்ததைக் பார்வையிட்டுக் கொண்டிருந்த சுந்தரநாராயணனைப் பார்த்தபடியே ஒரு பசு நிதானமாக நடந்து வந்து, அவர் முன்னால் நின்றது. அந்தப் பசுவை விரட்டிவிட்டுத் தன் வேலையைக் கவனித்தார் சுந்தரநாராயணன். அடுத்த நாள் அவர் வயலுக்குச் சென்றபோது, அந்தப் பசு அங்கே குவிக்கப் பட்டு இருந்த வைகோல்மீது படுத்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் அவருக்கு உறைத்தது. அந்த பசு சினையாக இருந்தது. விசாரித்தபோது, பக்கத்தில் இருந்த குண்ணம் என்ற ஊரைச் சேர்ந்தவரின் பசு அது என்று தெரியவந்தது. உடனே சுந்தரநாராயணன் அவரிடம் பேசி, அந்தப் பசுவை விலைக்கு வாங்கி அதற்கு பத்மாவதி தாயாரின் பெயரான பத்மா என்ற பெயர் சூட்டினார்.

இப்பொழுது அவரிடம் இரண்டு பசுக்கள். இரண்டு பசுக்கள் மட்டுமே இருந்தால், அது கோசாலை ஆகிவிடுமா என்ன? நிறைய பசுக்கள் இருந்தால்தானே கோசாலைக்கு அழகு?! அதற்கும் மகான் ராகவேந்திரர் தன்னுடைய அருளாடலை நிகழ்த்தினார். சென்னையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான பரிமளம் என்பவரது கனவிலும், திரிபுரசுந்தரி என்பவரது கனவிலும் தோன்றி, சித்தமல்லி திருவேங்கடநாதர் ஆலயத்தின் கோசாலைக்கு பசு வாங்கிக் கொடுக்கும்படி உத்தரவு தந்தார். அவர்களுக்கும் அப்படியே வாங்கித் தர, சுந்தரநாராயணனிடம் இப்போது நான்கு பசுக்கள் சேர்ந்துவிட்டன. 'இனி கவலை இல்லை. ராகவேந்திரர் சொன்னபடியே வைத்தீஸ்வரன்கோவில் ஆலயத்துக்கு பிரதோஷம் தோறும் பால் கொடுத்து விடலாம்' என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார். அவருடைய சந்தோசத்தை மேலும் அதிகரிப்பதுபோல், அவருடைய நண்பரும் ஸ்டேட் பாங்க்கில் பணிபுரிபவருமான சீனிவாசன் என்பவரும் ஒரு பசுவை வாங்கி, கோசோலைக்கு அர்ப்பணித்தார். அடுத்த சில வாரங்களுக்குள், சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் குமார் என்னும் அன்பர், தன் தாயின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு பசுவை வாங்கி, அதற்கு ராஜலக்ஷ்மி என்று பெயர் சூட்டி கோசாலைக்கு தானம் செய்தார். சுந்தர நாராயணனுக்குச் சந்தோஷம் தாளவில்லை.

ஆனால், அவ்வப்போது சில கஷ்டங்களையும் சங்கடங்களையும் அனுபவித்தால்தானே மனித மனம் பக்குவப்படும்?!

சில மாதங்களில், பசுக்கள் தந்துகொண்டிருந்த பாலின் அளவு குறையவே, இன்னும் இரண்டு பசுக்களை வாங்கினால்தான் சரியாக இருக்கும் என்று சுந்தரநாராயணன் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், பக்கத்தில் இருந்த மணல்மேடு என்ற ஊரில் இருந்து வந்த ஒரு மாட்டுத் தரகர், ஓர் உயர் ஜாதி பசு விலைக்கு வந்திருப்பதாகச் சொல்லி, சுந்தரநாராயணனை அழைத்து சென்றார் அவருடன் சென்று சுந்தரநாராயணன் அந்தப் பசுவைப் பார்த்தார். அது ஓர் உயர்ஜாதி சிந்திப் பசு. பசு அவருக்கு மிகவும் பிடித்து போனது. விலையை விசாரித்தார். தரகர் சொன்ன விலையை கேட்டதும். சுந்தர நாராயணன் ஆடிப்போய் சற்றே பின்வாங்கினார். தரகர் சொன்ன விலை 65,000 ரூபாய். சுந்தரநாராயணன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சொல்லியும் அந்த தரகர் விடுவதாக இல்லை. அவரே பசுவின் விலையில் 10,000 ரூபாய் குறைத்து, தன் கையில் இருந்தே 101 ரூபாய் முன்பணமாகக் கொடுத்து சுந்தரநாராயனுக்கு விற்றதுடன், அவர் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் ஒரு வண்டியில் பசுவை ஏற்றி, சித்தமல்லிக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.

அத்துடனாவது அந்தத் தரகர் சும்மா இருந்தாரா என்றால், அதுதான் இல்லை, சுந்தரநாராயணனை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த இன்னொரு கிராமத்துக்குச் சென்றார். அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் விற்பதற்குத் தயாராக வைத்திருந்த பசுவையும் 29.000 ரூபாய்க்கு விலை பேசி, சுந்தரநாராயணனை வாங்கும்படி செய்துவிட்டார். ஆக, சுந்தரநாராயணன் இப்போது 84,000 ரூபாய்க்குக் கடனாளி!

தன் பக்தனை மேலும் தவிக்கவிடாமல், ராகவேந்திரர் ஓர் அருளாடல் புரிந்தார். தன் தாயின் நினைவாக ஒரு பசுவை கோதானம் செய்திருந்த குமார் என்பவரின் உறவினரிடம் இருந்து அடுத்த நாளே கோயில் திருப்பணிக்காக ஓரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வந்து சேர்ந்தது.பெருமாளின் அருள்திறனையும் ராகவேந்திரரின் அனுக்கிரஹத் தையும் எண்ணி பூரித்துப் போனார் சுந்தரநாராயணன்.

ஒரு நாள், அவர் மதியவேளையில் பசுக்களுக்கு தீவனம் கொடுத்துக்கொண்டிருந்தார். இன்னும் இரண்டு பசுக்களுக்கு மட்டுமே தீவனம் கொடுக்கவேண்டி இருந்தது. அவற்றின் முன் தீவனத் தொட்டிகளை வைத்து தீவனத்தை ஊட்ட முயற்சித்தார். அவற்றின் ஒரு பசு, ஸ்ரீராகவேந்திரரால் கனவில் அடையாளம் கட்டப்பட்ட பசுவாகும். ஆனால், ஏனோ தெரியவில்லை, அடமாக அந்த இரண்டு பசுக்களும் உணவை ஏற்க வாயைத் திறக்கவே இல்லை. சுந்தரநாராயணனுக்கோ கொள்ளைப் பசி! அவருக்குள் ஓர் ஓரத்தில் மறைந்திருந்த மூர்க்கம் தலைதூக்கியது. அந்த ஆவேசத்தில் அந்தப் பசுக்களைப் பார்த்து, "ஏன் இப்படி ஏன் பிராணனை வாங்குகிறீர்கள்?" என்று கோபத்துடன் அடிக்கப் பார்த்தார்.

அப்போது, அவர் மனக்கண்ணில் தோன்றியது ஒரு விசித்திரக் காட்சி! அது...

சுந்தரநாராயணன், தீவனம் எடுத்துக் கொள்ளாமல் அடம் பிடித்துக் கொண்டிருந்த பசுக்களை அடிக்கப் பார்த்த நேரத்தில், அவருடைய பார்வையில் ஓர் அற்புதக் காட்சி தெரிந்தது. அந்தப் பசுக்களின் பின்பாக மந்த்ராலய மகான் தோன்றி, 'என்னால் உன்னிடம் ஆற்றுப்படுத்தப்பட்ட பசுவையா அடிக்கப் பார்க்கிறாய்?' என்று கேட்காமல் கேட்பதுபோல் தோன்றியது. அவ்வளவுதான்... அதிர்ந்து போனவராக மந்த்ராலய மகானிடம் மானசிகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்ட சுந்தரநாராயணன், எவ்வளவு சீக்கிரம் மந்த்ராலயம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போகவேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டார். உடனே, அதுவரை தீவனம் எடுத்துக்கொள்ளாமல் அடம்பிடித்துக் கொண்டடிருந்த பசுக்கள் சாதுவாக தீவனம் எடுத்துக்கொண்டன..

மதிய வேளையில், சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டடிருந்த சுந்தரநாராயணனுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய நண்பர் பாஸ்கரன் அவரை போனில் தொடர்புகொண்டு, தாங்கள் சிலர் ஒன்று சேர்ந்து மந்த்ராலயம் செல்லப்போவதாகவும், சுந்தரநாராயணனுக்கும் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.அதைக் கேட்டதுமே, ராகவேந்திர ஸ்வாமிகளின் கருணா கடாக்ஷத்தை உணர்ந்து, நெகிழ்ந்துபோனார் சுந்தரநாராயணன்.மந்த்ராலயம் செல்லவேண்டும் என்று நினைத்த மாத்திரத்தில் அழைப்பும் அதற்கான வாய்ப்பும் வந்துவிட்டதே! சிலிர்ப்பும் பரவசமும் இருக்கத்தானே செய்யும்?!

அவர்கள் மந்த்ராலயத்துக்குச் செல்லும் வழியில், ஹம்பிக்கும் சென்றனர். அங்கேதான் ராமபிரான் ஆஞ்சுநேயரையும் சுக்ரீவனையும் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த தெய்வத் திருவுருவங்கள், அந்நியர்கள் படையெடுப்பின்போது பின்னப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றையும் பக்தர்கள் பக்தியுடன் வழிபடத்தான் செய்தார்கள். அதையெல்லாம் பார்த்த பிறகு சுந்தரநாராயணன் மனதில் இருந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் போனது.

அனைவரும் மந்த்ராலயம் சென்றனர். மறுநாள் காலையில் ஸ்நானம் செய்துவிட்டு, பஞ்சகச்சம் உடுத்திக்கொண்டு நண்பர்களுடன் மந்த்ராலய மகானை தரிசிக்கச் சென்றார் சுந்தரநாராயணன். தரிசனத்துக்காக அவர்கள் சிறப்பு அனுமதியும் பெற்றிருந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்துக்காக ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் காத்துக்கொண்டிருந்த நேரத்தில், வேதபாராயண கோஷ்டி ஒன்று வேதகோஷங்களுடன் வந்துகொண்டிருந்தது. அந்தக் கோஷ்டியினர் சுந்தரநாராயணன் நின்றுகொண்டிருந்த இடத்தின் அருகில் வந்தபோது, அதை முன்னின்று வழிநடத்தி வந்த ஒரு பட்டர், சுந்தரநாராயணனைத் தன்னுடன் வரும்படி சைகை செய்து அழைத்தார். முன்பின் தெரியாத அவர் தன்னை ஏன் அழைக்கப் போகிறார், வேறு யாரையோ அழைக்கிறார்போலும் என்று நினைத்தவராக நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தார் சுந்தரநாராயணன். ஆனால், அந்த பட்டர் திரும்பத் திரும்ப இவரை அழைக்கவே, அந்த பட்டருடன் கிளம்பிச் சென்றார்.

வேத கோஷ்டியினருடன் சென்ற சுந்தர நாராயணன், வேத பாராயணம் முடியும்வரை மகானின் பிருந்தாவனத்தில், அவருடைய அருள் பிரவாகத்தில் திளைத்துக் கொண்டடிருந்தவர், வெளியில் வரும்போது அந்தக் பட்டரிடம், "நண்பர்களுடன் இருந்த என்னை மட்டும் தனியாக அழைத்ததற்குக் காரணம் என்ன?" என்று கேட்டார்.

"ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியாது. உங்களை எங்களோடு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதாக ஓர் எண்ணம் திரும்பத் திரும்ப எனக்குள் தோன்றியது. எனவேதான் உங்களை அழைத்தேன் " என்றார் பட்டர்.

தெய்வத் திருப்பணிகளுக்குத் தம்மால் தேர்வு செய்யப்பட்ட சுந்தரநாராயணனுக்குத் தம்மிடம் அளவற்ற பக்தியும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்பதற்காக ஸ்ரீராகவேந்திரர்தான் அந்த பட்டரின் மனதில் அப்படி ஓர் எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும். அதுதான் சத்தியமும்கூட என்பதுபோல் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் உறுதிப்படுத்தின.

பிருந்தாவன தரிசனம் முடித்துவிட்டு வெளியில் வந்த சுந்தரநாராயணன் மீண்டும் ஒருமுறை நண்பர்களுடன் தரிசனத்துக்குச் சென்றார். மகானின் அனுக்கிரகத்தை பல நிலைகளில் பூரணமாக உணர்ந்த நிலையிலும், பழைய வாசனை போகவில்லை என்பதுபோல் ஓர் எண்ணம் ! தான் கொண்டு வந்திருந்த திருப்பணி பத்திரிகையை மகானின் பிருந்தாவனத்தில் வைக்கச் செய்து, 'ஸ்வாமி, தங்களின் திருவுள்ளபடித்தான் என்னைப் பெருமாளின் கைங்கர்யத்தில் ஈடுபடச் செய்திருக்கிறீர்கள் என்பது உண்மையானால், தங்களின் பூரண அனுகிரகஹத்தை எனக்கு உணர்த்தி அருள வேண்டும்' என்று சவால் விடுவது போன்று ஒரு வேண்டுதலை முன்வைத்தார்.

சுந்தரநாராயணனின் மனதில் தோன்றிய சந்தேகம் மகானுக்குத் தெரியாதா என்ன? அடுத்து கணமே அந்த அற்புதம் நிகழ்ந்தது.

மகானின் பிருந்தாவனத்துக்கு மேலாக அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த கனகாம்பர உதிரிப் பூக்கள், பூமழை பொழிவதுபோல் திருப்பணி பத்திரிகையின் மேல் பொழிந்தன. தம்முடைய பரிபூரண அனுக்கிரஹம் இருக்கவேதான் சுந்தரநாராயணனால் பெருமாளின் திருப்பணிகளில் ஈடுபட முடிந்தது என்பதை உறுதி படுத்திவிட்டார் மந்த்ராலய மகான்!

தரிசனம் முடித்து நண்பர்களுடன் வெளியில் வந்த சுந்தரநாராயணனின் மனதில், ஸ்ரீராகவேந்திரரின் அனுக்கிரஹம் கிடைத்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், கூடவே ஒர் மனக் குறையும் இருக்கத்தான் செய்தது.

நண்பர்களுடன் இரண்டாவது முறையாக பிருந்தாவன தரிசனத்துக்குச் சென்ற சுந்தரநாராயணன், ஸ்ரீராகவேந்திரருக்கு அர்பணிப்பதற்காக ஒரு தேங்காயைக் கொண்டு சென்றிருந்தார். அப்போது அங்கே பூஜை செய்யும் ஸ்வாமிஜி இல்லாததால், தேங்காயை உடைத்து அர்ப்பணிக்க முடியவில்லை. இந்தக் குறையுடனே பிருந்தாவனத்தில் இருந்து பிரசாதங்களுடன் புறப்பட்டார் சுந்தரநாராயணன். அவர் வெளியில் வருவதற்குச் சற்று முன்பாகவே அந்த அதிசயம் நிகழ்ந்தது. சுந்தர நாராயணனின் மனக் குறையும் நீங்கியது. எப்படி?

மந்த்ராலயத்தில் ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவனத்தை தரிசித்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு, தான் கொண்டுவந்திருந்த தேங்காயை ஸ்ரீராகவேந்திரருக்கு அர்ப்பணிக்க முடியவில்லையே என்ற வருத்தத்துடன் சுந்தரநாராயணன் வெளியில் வந்தபோதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.

அவர் வைத்திருந்த பையில் இருந்து ஈரம் கசிவதுபோல் இருக்கவே, அவர் அந்தப் பையைப் பிரித்துப் பார்த்தார். பையில் வைத்திருந்த தேங்காய் இரண்டாக உடைந்திருந்தது. சுந்தரநாராயணனுக்குச் சந்தோஷம் தாங்கவில்லை.தேங்காய் எப்படி உடைந்திருக்கும் என்றெல்லாம் அவர் ஆராய்ச்சியில் இறங்கவில்லை. ஆத்மார்த்தமான பக்திக்கு அத்தகைய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லைத்தானே? ராகவேந்திரரின் பிருந்தாவனத்தில் இருந்து வெளியில் வருவதற்கு முன்பாக அந்தத் தேங்காய் உடைந்தது ஸ்ரீராகவேந்திரரின் அருளால்தான் என்று பரிபூரணமாக நம்பினார். இந்த உணர்பூர்வமான நம்பிக்கைதான் ஆன்மிக முன்னேற்றத்துக்கு அடிப்படையாகத் திகழ்கிறது.

சுந்தரநாராயணன் என்னதான் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தாலும், அவருடைய பூர்வஜன்ம புண்ணியத்தின் பலனாக மகான் ஸ்ரீராகவேந்திரரின் அருளுக்குப் பாத்திரமானதுடன், அவரால் வழிபடப்பெற்ற பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடநாத பெருமாளுக்குக் கோயில் கட்டக்கூடிய பெறற்கரிய பேறும் கிடைத்தது .அதற்கேற்ப அவருடைய கடவுள் நம்பிக்கையின்மையும், முரட்டுத்தனத்தையும் அடியோடு மாற்றி, அவருடைய மனதில் ஆழ்ந்த பக்தியையும், உணர்வுகளில் பெரும் மாற்றத்தையும் ஏற்படுத்தி அருள்புரிந்தார் மகான் ஸ்ரீராகவேந்திரர்.

தம்முடைய திருவுள்ளத்தின்படி சுந்தரநாராயணனை திருவேங்கடநாத பெருமாள் கோயில் திருப்பணியில் ஈடுபடுத்திய ராகவேந்திரர், பெருமாளின் அருள்திறத்தினையும், தன்னை வழிபடுபவர்களின் வாழ்க்கையில் பெருமாள் எப்படியெல்லாம் அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதை உலகத்தவர்க்குப் புரிய வைக்கவேண்டும் என்பதற்காகவும், எண்ணற்ற பக்தர்களை சித்தமல்லி பெருமாளிடம் ஆற்றுப்படுத்தவும் செய்தார்.

ஸ்ரீராகவேந்திரரால் ஆற்றுப்படுத்தப்பட்டு திருவேங்கடநாத பெருமாளின் அருள்திறத்தால், தங்கள் வாழ்க்கையில் அதிசியங்களும் அற்புதங்களும் நடைபெற்ற பக்தர்கள் ஏராளம்.அவற்றில் ஒர் சில அற்புதங்களை இங்கே பார்ப்போம்.

மூன்று வருடங்களுக்கு முன்பு, ஓர் அன்பரின் வாழ்க்கையில் பெருமாள் நிகழ்த்திய அற்புதம் இது...

சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். பெரும் செல்வந்தரான அவருக்கும் அவருடைய மனைவி பானுமதிக்கும் நீண்ட காலமாகவே ஒரு மனக் கவலை. தங்களின் மகள் அனுராதாவின் திருமணம் தடைபட்டுக்கொண்டே போகிறதே என்பதுதான் கவலைக்குக் காரணம். திருமணம் தடைப்படுவதற்குக் காரணம், அந்தப் பெண்ணின் உடலில் பரவலாக வெண்புள்ளிகள் இருந்ததுதான். இதன் காரணமாக, வரன்கள் அத்தனைபேருமே வேண்டாம் என்று விலகிச் சென்றனர். என்ன செய்வது என்று புரியாமல் கலங்கிக்கொண்டிருந்த தங்கவேல் தம்பதியர், தங்களுடைய குடும்ப நண்பர் ஒருவரின் மூலமாக பத்மா மாமியைப் பற்றிப் கேள்விப்பட்டனர். அவரைச் சந்தித்துப் பேச ஆவல் கொண்டனர். ஆனால், பல,பலமுறை முயற்சித்தும் முடியவில்லை.ஏதேதோ காரணங்களால் சந்திப்பு நிகழாமல் தள்ளிக்கொண்டே போனது. ஏதற்கும் நேரம் காலம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?

அவர்களுடைய தொடர் முயற்சியின் பயனாக, ஒருநாள் பத்மா மாமியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் தங்கள் மனத்தை வெகுநாளாக அரித்துக்கொண்டிருக்கும் கவலையைப் பற்றி கூறினாா்கள்.

பத்மா மாமி ஸ்ரீராகவேந்திரரிடம் அவர்களுடைய கவலையைப் பற்றி முறையிட்டுப் பிரார்த்தித்தார். ஸ்ரீராகவேந்திரரும்,தங்கவேல் தம்பதியரிடம் இரக்கம் கொண்டு,அவர்களுக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். புத்மா மாமியின் வாய்மொழியாக அவர்களுக்கு ஒரு வழியை கூறி அருளினார்.

அதன்படி, அவர்கள் சித்தமல்லிக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் சேவித்தனர். ஸ்ரீராகவேந்திரர் சொன்னபடியே, தங்களின் மகளுக்குத் திருமணம் கூடி வந்ததும், மகளுக்கு என்ன விலையில், என்ன தரத்தில் பட்டுப் புடைவை வாங்குகிறோமோ, அதே விலையில் அதே தரத்தில் தாயாருக்கும் புடைவை வாங்கி அர்ப்பணிப்பதாகப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

பெருமாளிடம் பிரார்த்தித்துக்கொண்டு சென்னைக்குத் திரும்பிய மறுநாளே அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது.

அவர்களின் தூரத்து உறவில் இருந்து ஒருவர் அனுராதாவைப் பெண் பார்க்க வந்திருந்தார். மருத்துவத் துறையில் நல்ல பொறுப்பில் இருப்பவர் அவர். பார்க்க கம்பீரமாகவும் லட்சணமாகவும் இருந்தார். அவரைப் பார்த்ததுமே தங்கவேல் தம்பதியருக்கு அந்த வரன் அமைந்தால் நன்றாக இருக்குமே என்ற விருப்பம் உண்டானது. ஆயினும், படிப்பிலும் அந்தஸ்திலும் ஒரு குறையும் இல்லாத அந்தப் பிள்ளைக்கு, உடல் முழுவதும் வெண்புள்ளிகள் இருக்கும் தங்கள் பெண்ணை எப்படி பிடிக்கும் என்ற எண்ணம் எழுந்தது, ஆதங்கத்தையும் கவலையையும் மேலும் அதிகப்படுத்திவிட்டது.

எதுவுமே இறைவளின் சித்தப்படிதானே நடக்கும்? பெண் பார்க்க வந்த அந்தப் பெண்ணின் உடலில் வெண்புள்ளிகள் இருப்பதைக் கண்டு சற்றும் தயக்கம் கொள்ள வில்லை: பின்வாங்கவும் இல்லை. பெண்ணைப் பெற்றவர்களின் தயக்கத்தைப் போக்கும் வகையில், "எனக்குப் பெண்ணை மிகவும் பிடித்துவிட்டது. நீங்கள் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்" என்று சொல்லி விட்டார்.

பெண்ணைப் பெற்றவர்கள் ஸ்ரீராகவேந்திரரையும், அவருடைய வாக்கின்படி தரிசித்து வணங்கிய சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாளையும் மானசிகமாக நமஸ்கரித்தனர். தங்கள் பெண்ணுக்கு ஒரு வழியாக திருமணம் குதிர்ந்ததில் அவர்களுக்கு சொல்லவொண்ணாத மகிழ்ச்சி! ஆனாலும், அவர்களின் உள்ளத்தின் ஒரு மூலையில், உடல் முழுவதும் வெண்புள்ளிகளுடன் இருக்கும் தங்கள் பெண்ணை அந்த வரனுக்கு எப்படி பிடித்துப்போனது என்பதாக ஒரு சந்தேகமும் குழப்பமும் இருக்கவே செய்தது. அது அவர்களின் பார்வையிலும் பிரதிபலித்தது.

அவர்களின் பார்வையின் பொருளைப் புரிந்துகொண்டவர் போல், "உங்கள் பெண்ணின் உடலில் வெண்புள்ளிகள் இருப்பது ஒரு குறையே இல்லை. அது ஒரு தொற்று வியாதியும் இல்லை. தொடர்ந்த சிகிச்சையின் முலம் அதை எளிதாகக் குணப்படுத்தவும் முடியும். எனவே, உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்" என்று தங்கவேல் தம்பதியருக்கு ஆறுதல் சொல்லி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவர்களின் மகளைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இப்போது ஓர் அழகான குழந்தையும் உள்ளது.

தங்கவேல் தம்பதியரும், தாங்கள் சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாளிடம் வேண்டிக் கொண்டது போலவே, தங்கள் பெண்ணின் திருமணத்துக்கு என்ன விலையில், என்ன தரத்தில் புடைவை எடுத்தார்களோ, அதே விலையில் அதே தரத்தில் புடைவை எடுத்து தாயாருக்கு அர்ப்பணித்தார்கள்.

இன்னொரு அனுபவம்... சென்னை, கே.கே.நகரில் இருப்பவர் கிருஷ்ணன். மிகவும் ஏழ்மையான குடும்பம். ஆனால், அவருக்கு பகவான் ஏற்படுத்தியதோ மிகப் பெரிய சோதனை.

அந்த சோதனை என்ன?

அவர் அந்தச் சோதனையில் மீண்ட விதம்தான் எப்படி?

மகான் ஸ்ரீராகவேந்திரரால் வழிபடப் பெற்ற சித்தமல்லி திருவேங்கடநாத பெருமாள், தான் அருளாட்சி புரியும் ஊரின் பெயருக்கு ஏற்ப, பக்தர்களின் வாழ்கையில் எண்ணற்ற சித்தாடல்களைப் புரிந்து, அவர்களுடைய வாழ்கையில் எந்த குறையும் இல்லாமல், நிறைவான நிம்மதியையும் சந்தோஷத்தையும் அருளிவருகிறார்.

அப்படிதான் மூன்று வருஷங்களுக்கு முன்பாக, சென்னையை சோ்ந்த கிருஷ்ணன் என்பவரின் வாழ்விலும் அவர் ஓர் அருளாடலை நிகழ்த்தினார்.

கிருஷ்ணனுக்கு பெரிதாக வசதி, வாய்ப்பு எதுவும் கிடையாது. ஒருமுறை, அவர் ஒரு பெரிய சோதனையில் சிக்கி, அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார். 'மிகுந்த கடவுள் பக்தி கொண்ட தனக்கு என் இப்படி ஒரு சோதனையை பகவான் ஏற்படுத்தினார்? என்று எண்ணி மணம் வருந்தினார். கடவுளை நம்பினோர் என்றும் கைவிடப்படுவதில்லை என்னும் மறைமொழிக்கு ஏற்ப, அவருடைய துன்பம் நீங்க ஒரு வழி பிறந்தது.

அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவர், ராகவேந்திரரின் பக்தை யான பத்மா மாமியை பற்றி எடுத்துச் சொல்லி, அவரை உடனே போய்ப் பார்க்கும்படி சொன்னார்.

பத்மா மாமியின் வீட்டுக்குச் சென்ற கிருஷ்ணன், தனக்கு எற்பட்டுள்ள துன்பத்தை அவரிடம் சொல்லி முறையிட்டார்.

கிருஷ்ணனின் மகளுக்கு 1965-ம் ஆண்டு, அலர்ஜியின் காரணமான பார்வை குறைபாடு ஏற்பட்டது. எத்தனையோ சிகிச்சைகள் எடுத்தும் பலன் இல்லை. அந்த நிலையிலும் மிகவும் சிரம்மப்பட்டு பட்டப் படிப்பை முடித்தார் அந்தப் பெண். தொடர்ந்து மேற்படிப்பபுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில், அவரின் பார்வைத் திறன் முழுவதுமாக பாதிக்கப்பட்டது. பல மருத்துவர்களைப் பார்த்தும், பலன் என்னவோ பூஜ்ஜியம்தான். அந்த நிலையில்தான் கிருஷ்ணன் பத்மா மாமியை பார்க்க வந்திருந்தார். மாமி சொன்னபடியே அவர் உடனடியாக சித்தாமல்லிக்குச் சென்று, பெருமாளையும் தாயாரையும் சேவித்துவிட்டு வந்தார்.

மறுநாளே அவருக்கு ஒரு நல்ல செய்தி காத்திருந்தது. வெளிநாட்டிலிருந்து பிரபல கண் மருத்துவர் ஒருவர் வந்திருப்பதாகவும், அவரிடம் சென்றால் உரிய சிகிச்சைகளின் மூலம் பார்வை கிடைக்கும் சாத்தியம் உண்டு என்றும் அவரின் நண்பர் சொன்னார். கிருஷ்ணனும் உடனே அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு, தன் மகளை அழைத்துக் கொண்டு போய் அந்த மருத்துவரைப் பார்த்தார். மகளைப் பரிசோதித்த மருத்துவர், அறுவைச் சிகிச்சை செய்தால் கண்களுக்குப் பார்வை கிடைக்கும் என்று கூறியதுடன், அந்த அறுவைச் சிகிச்சை செய்தால் கண்களுக்கு பார்வை கிடைக்கும் என்று கூறியதுடன், அந்த அறுவைச் சிகிச்சை மிகவும் சிக்கலானது என்றும், செலவு அதிகம் பிடிக்கும் என்றும் கூறினார்.

அந்த அளவுக்கு செலவு செய்ய கிருஷ்ணனிடம் பண வசதி இல்லை. திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்பது போல் அவர் மீண்டும் பத்மா மாமியிடம் வந்தார். மாமி சொல்லியபடியே மீண்டும் ஒருமுறை சித்தமல்லிக்குச் சென்று, பெருமாளை சேவித்ததுடன், அங்கே நடந்த பூச்சொரிதல் வைபவத்திலும் பங்கேற்றார். அதையடுத்து, 'ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகிறது என்பதாக அவருடைய உள்ளுணர்வு சொல்லி, குழம்பியிருந்த மனத்தில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது. அவரின் நம்பிக்கையை நிறைவேற்றுவதுபோல் பெருமாள் சில நல்ல உள்ளங்களில் தோன்றி, கிருஷ்ணனின் மகளுக்கு சிகிச்சைக்குத் தேவையான நிதியுதவி கிடைக்கச் செய்து விட்டார். அறுவைச் சிகிச்சையும் நல்லபடியாக முடிந்து, இழந்த பார்வையை மீண்டும் பூரணமாகத் திரும்பக் கிடைக்கப் பெற்றார் அவரின் மகள்.

தன்னை வந்து சேவிக்கும் எவருக்கும் அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்குத் தேவையானவற்றை அருள்வதில் சமர்த்தர், சித்தமல்லி பெருமாள். அப்படித்தான் சென்னையைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் வாழ்கையிலும் பெருமாள் அருள்புரிந்திருக்கிறார்.

இந்த அன்பரிடம்தான் முதன்முதலில் பத்மா மாமி சித்தமல்லி பெருமாளைப் பற்றி எடுத்துச் சொல்லி அவர்களையும், அவர்களைத் தொடர்ந்து பெருமாள் இருந்த வீட்டின் உரிமையாளரான சுந்தரநாராயணனையும் பெருமாளிடம் ஆற்றுப் படுத்தியவர்.

பத்மா மாமி சொன்னபடியே சித்தமல்லிக்குச் சென்று பெருமாளுக்கும் தாயாருக்கும் வஸ்திரம் சமர்ப்பித்த ராமமூர்த்தி தம்பதி, அன்றுமுதல் நினைத்த நேரத்தில் எல்லாம் சித்தமல்லிக்குச் சென்று பெருமாளைச் சேவித்து வருவதை வழக்கப் படுத்திக்கொண்டனர். ராமமூர்த்தி செய்து வந்த தொழில் பெரிதாக முன்னேற்றம் எதுவும் இல்லாமல், மிகவும் சுமார் நிலையில்தான் ஒடிக்கொண்டிருந்தது. ஆனாலும், அவர் பெருமாளிடம் அதுகுறித்தும் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை.

அவர் கோரிக்கை வைக்காவிட்டாலும், அவருக்குத் தேவையானவற்றை அருள் புரியவே செய்தார். ஆம், ராமமூர்த்தி சித்தமல்லி பெருமாளைத் தரிசிக்கத் தொடங்கிய நாளில் இருந்து, அவருடைய தொழிலில் சீரான முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. அவருடைய மகனுக்குக்கும் வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்து முடித்த உடனே, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் உயர்ந்த பதவி கிடைத்தது, இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.

கேட்பவர்க்கும் சரி, கேட்காதவர்களுக்கும் சரி... தன்னை வந்து தரிசித்த மாத்திரத்திலேயே அருள்புரியும் சித்தமல்லி பெருமாள், தன்னை வந்து தரிசிக்க முடியாமல், தொலைவில் இருந்தே வேண்டிக் கொள்ளும் பக்தர்களுக்கும் அருள்புரியவே செய்கிறார்.

அப்படி ஒரு பக்தரின் வாழ்வில் பெருமாள் நகழ்த்திய அந்த அருளாடல்...

மகான் ராகவேந்திரரால் ஆராதிக்கபட்ட சித்தமல்லி திருவேங்கடநாதப் பெருமாள், மிகுந்த சாந்நித்தியம் கொண்டவர் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த பக்தர்கள் மிகப் பலர். ராகவேந்திரரால் வழிபடப்பெற்று, காலத்தின் கோலமாக அவர் கவனிப்பார் இல்லாமல் இருந்தாலும், எதிர்வரும் காலத்தில் ஏற்படப்போகும் இயற்கைச் சீற்றங்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் எனத் திருவுள்ளம் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்.

திருவேங்கடநாதப் பெருமாள், தமக்கென ஒர் ஆலயம் அமையும் திருவுள்ளம் கொண்டு, அதன் முதல்படியாக கடவுள் நம்பிக்கை இல்லாத சுந்தரநாராயணன் மனதைப் பல அருளாடல்களால் பக்குவப்படுத்தி, அதில் பக்திப் பயிர் தழைக்கச் செய்தார். அவரையே தமக்கான திருக்கோயில் திருப்பணியிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.

பெருமாளின் திருக்கோயில் பணிகளை நிறைவேற்ற பொருளுதவி வேண்டுமே, அதற்கு என்ன செய்வது என்று கலங்கி நின்றார் சுந்தரநாராயணன். இங்கேயும் பெருமாளின் அருளாடல்களே துணை நின்றன. எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் புரிந்து, அவர்களைத் தமக்கான ஆலயப் பணிகளுக்குப் பொருளுதவி செய்ய வைத்தார்.

கடலூரைச் சேர்ந்த பிரபல ஆடிட்டர் சீதாராம ஐயர். அவருடைய மகன் ரங்கராஜன். ரங்கராஜனின் மனைவி கல்பனா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இருவருக்குமே நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார் ரங்கராஜன். திருமணம் ஆகிப் பல வருடங்கள் கடந்தும், இரண்டு பிள்ளைகளுக்குமே குழந்தை பாக்கியம் இல்லை. எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்தும் பயன் இல்லை.

மிகுந்த மனத் துயரத்தில் இருந்த ரங்கராஜன் குடும்பத்தினருக்கு, சித்தமல்லி பெருமாளைப் பற்றித் தெரிய வந்தது. ஆனாலும், பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் அவர்களால் உடனே சித்தமல்லிக்குச் சென்று பெருமாளைச் சேவிக்க முடியவில்லை. எனவே, ரங்கராஜன் தம்பதியர் இருந்த அடத்தில் இருந்தபடியே சித்தமல்லி பெருமாளிடம், தங்கள் குலம் தழைக்க, தங்களுடைய இரண்டு பிள்ளைகளுக்கும் வாரிசு வேண்டி மனப் பூர்வமாகப் பிரார்த்தித்துக் கொண்டனர்.

தம்மை நேரில் வந்து தரிசிக்கா விட்டாலும், தம்மிடம் மனப் பூர்வமான பக்தியுடன் பிரார்த்தித்துக் கொண்டனர்.

தம்மை நேரில் தரிசிக்கா விட்டாலும், தம்மிடம் மனப் பூர்வமான பக்தியுடன் பிரார்த்தித்துக் கொண்டாலே, அவர்களுக்கு அருள்மழை பொழியக்கூடியவரல்லவா சித்தமல்லி திருவேங்கடநாதப் பெருமாள்! அவர் ரங்கராஜன் குடும்பத்திலும் அற்புதம் நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டார். அடுத்த சில ஆண்டுகளிலேயே, ரங்கராஜனின் இரண்டு பிள்ளைகளுக்குமே குழந்தை பாக்கியம் கிடைத்தது. பூரித்துப் போன ரங்கராஜன் தம்பதியர், பேரக் குழந்தைகளுடன் சித்தமல்லிக்கு வந்து பெருமாளை சேவித்ததுடன், ஆலயத் திருப்பணிகளுக்குத் தங்களால் இயன்ற பொருளுதவியும் செய்துவிட்டுச் சென்றனர்.

மயிலாடுதுரை பக்கம், விராலூரைச் சார்ந்த வைத்தியநாதன் என்பவரின் மகன் குமார். அவருக்கு ஒரு பெண். அழகும் நல்ல பண்புகளும் கொண்டிருந்த அந்தப் பெண், உயர் கல்வி முடித்து வங்கி ஒன்றில் நல்ல பணியிலும் இருந்தார். குமார் தன் மகளுக்குத் திருமணம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். எத்தனையோ வரன்கள் பார்த்தும் ஒன்றும் சரிவரவில்லை. வந்த வரன்கள் எல்லாம் ஏதேதோ காரணங்களால் தட்டிக்கொண்டே போனதால், குமாருக்கு மன உளைசல் உண்டாகி, மிகவும் துன்பப்பட்டார். தெய்வம்தான் தன் மகளுக்கு நல்ல வரன் அமைய அருள்புரிய வேண்டும் என்று அவர் கலங்கி நின்ற நிலையில், தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக சித்தமல்லி திருவேங்கடநாதப் பெருமாளைப் பற்றி அவருக்குத் தெரிய வந்தது.

பெருமாளின் அருள்திறம் பற்றி நண்பர் சொல்லக் கேட்டதுமே, குமார் சித்தமல்லி பெருமாளை மானசிகமாக சேவித்து, தன் மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்துகொண்டார். பெருமாளின் அருளால் குமாரின் மகளுக்கு உடனடியாக நல்ல வரன் அமைந்து, விரைவிலேயே திருமணமும் நடைபெற்றது. தான் நேரில் சென்று தரிசிக்காதபோதிலும், தன்னுடைய பிரார்த்தனைக்கு இரங்கி அருள்புரிந்த பெருமாளின் கருணைத் திறம் கண்டு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த குமார், மகளின் திருமணம் காணிக்கையாக திருமாங்கல்யம் ஒன்றைச் சம்பாரித்தார்.

சுந்தரநாராயணன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிப்பவர் நாகராஜன். அவருடைய மகன் ஸ்ரீகாந்த் திருமணமாகி, மனைவி தீபாவுடன் காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இருவருமே பொறியாளர்கள். அவர்களுடைய மகள் ஸ்ரீநிதி டாக்டர் சீட் மெரிட்டில் கிடைத்தால்தான் அவர்களுடைய விருப்பம் நிறைவேற முடியும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பது அவர்களால் முடியாத காரியம்.

நாகராஜன் சொன்னபடி ஸ்ரீகாந்த்தும் தீபாவும் சித்தமல்லி பெருமாளிடம் தங்கள் மகளுக்கு மெரிட்டில் மெடிக்கல் சீட், அதுவும் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டனர். பெருமாள் அவர்களுடைய வேண்டுதலையும் நிறைவேற்றினார். ஸ்ரீநிதி ப்ளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்றதுடன், அவர் விரும்பியது போலவே மெரிட்டில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்துப் படித்து வருகிறார்.

சுந்தரநாராயணனின் மைத்துனர் சுந்தரேசனின் மகன் நாகராஜன். சென்னை, சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார். இவருக்குத் திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லை. இவரும் சித்தமல்லி பெருமாளைப் பற்றிக் கேள்விப்பட்டு, சென்னையில் இருந்தபடியே பிரார்த்தித்துக் கொண்டார். பெருமாளின் அருளால் நாகராஜனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

இப்படி, நேரில் வந்து சேவிக்கும் விருப்பம் இருந்தும், பல்வேறு காரணங்களால் இயலாமல் இருந்த இடத்தில் இருந்தே தன்னிடம் பிரார்த்தித்துக் கொண்டவர்களின் விருப்பங்களையும் பெருமாள் கருணை உள்ளதோடு நிறைவேற்றி அருள்கிறார்.

ஆனால், முப்பொழுதும் சித்தமல்லி பெருமாளைத் தரிசிக்கும் வாய்ப்பு இருந்தும்,நேரில் வந்து தரிசிக்காமல் பெருமாளிடம் தன்னுடைய கோரிக்கையைச் சமர்ப்பித்தார் ஒருவர்.

அவருடைய கோரிக்கை நிறைவேறியதா?

இறைவன் கருணையே உருவானவன். நம்மிடம் இறைவன் எதிர்பார்ப்பது மனத் தூய்மையுடன் கூடிய அன்பைத்தான். மற்றபடி,'இதைத் தா, அதைத் தா,தினமும் வந்து என்னை தரிசித்து வணங்கும்,இன்னின்ன நேர்த்திக்கடன்களைச் செய் ' என்றெல்லாம் கேட்பதும் இல்லை; விரும்புவதும் இல்லை;இருந்த இடத்தில் இருந்தபடியே நமக்குப் பிரியமான இறைவனை மனத் தூய்மையுடன் கூடிய அன்புடனும் பக்தியுடனும் பிரார்த்தித்துக்கொண்டாலே போதுமானது;இறைவன் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி அருள்வார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இறைவனின் இந்தக் கருணைத் திறனுக்கான சத்தியசாட்சியாய் அமைந்ததுதான், கலியமூர்த்தி என்பவரின் வாழ்க்கையில் ஐயன் திருவேங்கடநாதப் பெருமாள் நிகழ்த்திய அருளாடல்.

கலியமூர்த்தி சித்தமல்லியில்தான் வசிக்கிறார்.அவர் நினைத்தால், தினமுமே மூன்று வேலையும் சென்று பெருமாளை சேவிக்கலாம்.ஆனால்,அவருடைய மனதில் ஏனோ அப்படி ஓர் எண்ணம் தோன்றவே இல்லை. வீட்டுக்குத் தேவையான கதவு, ஜன்னல் போன்றவற்றைச் செய்து தருவதே அவருடைய தொழில்.சிறப்பான முறையில் நேர்த்தியாக தன்னுடைய பணிகளை செய்து வரும் அவருக்கு மனதில் ஒரே ஒரு குறையும் மட்டும் இருந்தது.அவருடைய செல்ல மகளுக்கு திருமணம் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. எத்தனை வரன்கள் வந்தாலும், அத்தனையும் ஏதோ ஒரு காரணத்தால் அமையாமல் போனது.இந்தக் கவலையில் இருந்தவருக்கு,பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடநாதப் பற்றித் தெரிய வந்தது.

உள்ளுரிலேயே இருந்தும் அவரால் நேரில் சென்று பெருமாளை சேவித்து, தன் கோரிக்கையைச் சமர்ப்பிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு வேலைச் சுமை அவரை அழுத்தியது. இருப்பினும், தன் வீட்டு பூஜை அறையில் அமர்ந்து, மகளுக்கு விரைவிலேயே ஒரு நல்ல வரன் அமைந்து, நல்லபடியாகத் திருமணம் நடக்கவேண்டும் என்று சித்தமல்லி திருவேங்கடநாதப் பெருமாளிடம் மனமுருகிப் பிரார்த்தித்துக் கொண்டார்.தாயாருக்குத் திருமாங்கல்யம் காணிக்கை செலுத்துவதாகவும் வேண்டிக்கொண்டார்.

கலியமூர்த்தியின் தூய பக்திக்குத் கட்டுப்பட்டவராக, பெருமாள் அவருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார் விரைவிலேயே நல்ல வரன் அமைந்து கலியமூர்த்தியின் மகளுக்கு சீரும் சிறப்புமாகத் திருமணம் நடைபெற்றது கலிய மூர்த்தியும் தான் வேண்டிக் கொண்டபடியே தாயாருக்குத் திருமாங்கல்யம் காணிக்கை செலுத்தினார்.

சித்தமல்லி திருவேங்கட நாதப் பெருமாள்,கலியுகத்தின் கற்பக விருட்சமாகவும் காம தேவனுமாகயும் திகழும் மகான் ஸ்ரீராகவேந்திரரால் வழிபடப்பெற்றவர் அல்லவா? ஆக, அந்தப் பெருமாளின் கருணைத் திறம் பற்றிச் சொல்லவும் வேண்டுமா என்ன?!

சென்னையை சேர்ந்த சங்கீதா என்ற பக்தையின் வாழ்க்கையில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம் நம்மைச் சிலிர்க்கச் செய்கிறது.அன்பான கணவர், வசதியான குடும்பம் என எல்லாம் இருந்தும்,திருமணம் நடைபெற்றுப் பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேரு வாய்க்கவில்லை.பல மருத்துவர்களைப் பார்த்தும் பலன் இல்லை. ஒவ்வொரு நாளும் வேதனையாகவே விடிந்தது சங்கீதாவுக்கு.

இந்த நிலையில், வேதனை இருள் போக்க வந்த விடிவெள்ளியாக சங்கீதாவுக்கு ஓர் உத்தரவு கிடைத்தது சங்கீதாவின் அக்கா சுதா ஒரு நாள், "எத்தனையோ டாக்டர்களைப் பார்த்தும் பலன் இல்லையே என்று வருத்தப்படாதே! எல்லோருக்கும் மேலான டாக்டராக கடவுள் இருக்கிறார்.நாம் ஏன் நம் ஊருக்குச் சென்று பெருமாளிடம் பிரார்த்தனை செய்துகொள்ளக் கூடாது?" என்று கேட்டார்.

அக்கா சொன்ன வார்த்தைகள் சங்கீதாவுக்கு இனம்புரியாத ஆறுதலைத் தந்தன.அக்கா சொன்னதுபோல் ஊருக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதாக மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது.உடனே, குடும்பத்தோடு சித்தமல்லிக்குப் புறப்பட்டுவிட்டார் சங்கீதா. 2013-ம் வருடம் டிசம்பர் 18-ம் தேதி சித்தமல்லிக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் தரிசித்து வணங்கியதுடன், மணி ஒன்றையும் வாங்கி, தம்பதி சமேதராக சந்நிதியில் கட்டிவிட்டு வந்தனர்.

தன்னை நம்பிச் சரணடைந்ததுடன்,நாளும் தன் சந்நிதியில் மங்கள மணியோசை ஒலிக்கச் செய்த சங்கீதா தம்பதியரும் அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார் திருவேங்கடநாதப் பெருமாள்.சங்கீதாவின் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய லீலை, பெரும் அதிசயம்தான்.எத்தனையோ மருத்துவர்களை பார்த்தும் பலனின்றி வாடிய சங்கீதா தம்பதியருக்கு, பெருமாளை தரிசித்து வணங்கி வந்த அடுத்த சில மாதங்களிலேயே சந்தோஷச் செய்தி கிட்டியது.ஆம்... சங்கீதா கருத்தரித்தார்.

அவர்கள் பெருமாளின் சந்நிதியில் மணி வாங்கிக் கட்டியது 2013, டிசம்பர் 18-ம் தேதியன்று. அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2014 -ல், அதே டிசம்பர் 18-ம் தேதியன்று, மணியோசை போல் மழலைக் குரல் ஒலிக்க சங்கீதாவுக்கு அழகான ஓர் ஆண் குழந்தை பிறந்தது என்றால், இதைப் பெருமாளின் கருணைத் திறன் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது? திருவேங்கடநாதப் பெருமாளின் இந்த அருளாடலை இன்றைக்கும் பார்ப்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சங்கீதா தம்பதியினர்.

இப்படியாக பெருமாள், பத்மாவதி தாயார் சமேதராகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட சில வருடங்களிலேயே, எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்களை புரிந்து, அவர்களைத் தன் கோவில் திருப்பணிகளில் பக்திபூர்வமாக ஈடுபடச் செய்திருக்கிறார்; இன்னமும் செய்து வருகிறார்.